“அமைச்சரவையில் காங்கிரஸ் எங்கே? ‘வெயிட் பண்ணுங்க.. வரோம்”… தவெக ஆட்சியில் செல்வப்பெருந்தகை போட்ட அதிரடி பிளான்…!

By Nanthini on வைகாசி 10, 2026

Spread the love

   

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். ஆளுநர் அர்லேகர் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், அவருடன் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் மற்றும் சிவகாசி எம்.எல்.ஏ கீர்த்தனா உள்ளிட்ட 9 பேர் முதற்கட்டமாக அமைச்சர்களாகப் பதவியேற்றனர். ரகசிய காப்பு பிரமாணம் எடுத்துக்கொண்ட கையோடு, சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் சமரசம் கிடையாது என்ற அதிரடி உத்தரவையும் முதல்வர் விஜய் பிறப்பித்துள்ளார்.

இந்த அமைச்சரவையில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் யாரும் இடம்பெறாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “முதற்கட்டப் பட்டியலில் காங்கிரஸ் இடம்பெறவில்லை என்றாலும், அடுத்தகட்ட விரிவாக்கத்தின் போது நிச்சயமாக அரசின் ஒரு அங்கமாக இருப்போம்; அதனைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்” எனத் தெளிவுபடுத்தினார். மேலும், தவெக உடனான கூட்டணி உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தொடரும் என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

திமுகவுடனான நீண்ட கால கூட்டணியை திடீரென முறித்துக்கொண்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த செல்வப்பெருந்தகை, திமுகவிடம் சொல்லாமல் தாங்கள் வரவில்லை என்று மறுப்பு தெரிவித்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டி.ஆர். பாலுவிடமும், ராகுல் காந்தி கனிமொழியிடமும் பேசிவிட்டுத்தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் விளக்கமளித்தார். திமுகவின் கண்டனங்கள் குறித்துப் பேசிய அவர், அது அவர்களின் விருப்பம் என்றும், தவெகவுடன் இணைந்தது தங்கள் கட்சியின் விருப்பம் என்றும் கறாராகக் குறிப்பிட்டார்.

   

பெண்களுக்குத் தங்கம் உள்ளிட்ட அதிரடி தேர்தல் வாக்குறுதிகளைப் புதிய அரசால் நிறைவேற்ற முடியுமா என்ற கேள்விக்கு, “முதல்வர் விஜய் தனது நிலைப்பாட்டைத் தெளிவாகக் கூறிவிட்டார்” என்று செல்வப்பெருந்தகை பதிலளித்தார். கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாகத் தடையின்றி நிறைவேற்றப்படும் என்றும், அதற்குச் சற்று அவகாசம் தேவை என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 60 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், புதிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.