தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியிடையே நிலவும் ‘கெமிஸ்ட்ரி’ குறித்த விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளன. தேர்தல் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தொகுதிப் பங்கீடு மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக எழுந்த முரண்பாடுகள் பகிரங்கமாக எதிரொலித்தன. “ஆட்சியில் பங்கு” என்ற காங்கிரஸின் கோரிக்கைக்கு தி.மு.க தலைமை காட்டிய கறார் முகம், சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்களில் இன்னும் தணியாத புகைச்சலாகவே நீடித்து வருகிறது.
கூட்டணிக்குள் நிலவும் இந்த விரிசலுக்கு வலுசேர்க்கும் விதமாக ராகுல் காந்தியின் தமிழக வருகை தள்ளிப்போவது அறிவாலயத்தைச் சுணக்கமடையச் செய்துள்ளது. அண்டை மாநிலமான புதுச்சேரி வரை வந்த ராகுல், தமிழகத்திற்குள் எட்டிப்பார்க்காமல் சென்றது “கூட்டணிக்குள் எல்லாம் சரியில்லை” என்பதற்கான குறியீடாகவே பார்க்கப்படுகிறது. இந்த மௌனம் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேர்தல் களத்தில் இரு கட்சிகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தொகுதிப் பொறுப்பாளர்கள், கள நிலவரம் குறித்து கவலைகளை முன்வைத்தனர். தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறியால் தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் ஒருவித அதிருப்தி நிலவுவதாகவும், அவர்கள் பிரச்சாரத்திற்கு முழுமையாக ஒத்துழைப்பதில்லை என்றும் புகார்கள் வாசிக்கப்பட்டன. ஸ்டாலினும் ராகுலும் இணைந்து ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தால் மட்டுமே கீழ்மட்டத் தொண்டர்களுக்குச் சரியான செய்தி போய்ச் சேரும் என்றும், அப்போதுதான் களப்பணிகள் வேகம் எடுக்கும் என்றும் தலைவர்களிடம் வலியுறுத்தப்பட்டது.
இதற்குப் பதிலளித்த முகுல் வாஸ்னிக், ராகுல் காந்தியின் வருகை தாமதமாவதற்கான காரணங்களை விளக்கினார். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மற்றும் முதல்கட்டத் தேர்தல் பணிகள் காரணமாகவே இந்தத் தாமதம் ஏற்பட்டதாகவும், விரைவில் ராகுல் காந்தி தமிழகம் வரவிருப்பதாகவும் அவர் உறுதியளித்தார். இதற்காக இரண்டு முக்கியத் திட்டங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து பிரச்சாரம் செய்ய தி.மு.க-விடம் நேரம் கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், ஓரிரு நாட்களில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
