தமிழக அரசியலில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகள் எதிர்பாராத திருப்பங்களைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வீசிய அரசியல் வலைக்குள் காங்கிரஸ் கட்சி சிக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 30 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ள நிலையில், ராகுல் காந்தி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு புதிய பாதையில் பயணிக்கத் திட்டமிட்டுள்ளது ஆளுங்கட்சியான திமுகவுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய காங்கிரஸுக்கு, திமுக தலைமை பிடிகொடுக்காமல் இழுபறி நீடித்து வந்தது. அதே நேரத்தில், வலுவான வேட்பாளர்கள் மற்றும் நிதி ஆதாரங்களுக்காகத் தவித்துக் கொண்டிருக்கும் தவெக, காங்கிரஸை ஈர்க்க அதிரடிச் சலுகைகளை முன்வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 60 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்வதுடன், ஒரு துணை முதல்வர் பதவி மற்றும் மூன்று அமைச்சர் பதவிகளை வழங்க விஜய் தரப்பு சம்மதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த பிரம்மாண்டமான ஆஃபர் டெல்லி மேலிடத்தைச் சிந்திக்க வைத்துள்ளது.
தவெகவுடன் கூட்டணி அமைத்தால் ஆட்சியில் அதிகாரப் பங்கீடு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ராகுல் காந்தியிடம் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலமாக திமுகவின் நிழலிலேயே பயணிப்பதை விட, ஒரு புதிய முயற்சியாக விஜயுடன் கைகோர்ப்பது காங்கிரஸின் எதிர்காலத்திற்கு வலு சேர்க்கும் என ராகுல் காந்தி ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. இது தொடர்பான ரகசியப் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.
திமுகவின் பிடியில் இருந்து காங்கிரஸ் விடுபட்டு தவெக பக்கம் சாயத் தொடங்கியிருப்பது முதல்வர் ஸ்டாலினுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் விலகினால் அது மற்ற கூட்டணி கட்சிகளான விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் இட ஒதுக்கீட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் திமுக முகாம் கலக்கமடைந்துள்ளது. இறுதியில் காங்கிரஸ் கட்சி விஜய்யின் “மாஸ்டர் பிளானில்” இணைந்து திமுகவுக்குத் தண்ணி காட்டுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
