நடிகரும், கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்துக்கு மாநில அளவில் முக்கிய பொறுப்பு ஒன்றை அகில இந்திய காங்கிரஸ் தலைமை வழங்கியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊடகப்பிரிவின் தலைவராக விஜய் வசந்ததை நியமித்து, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் ஒப்புதலோடு இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.
வசந்த் அண்ட் கோ நிறுவனரும், மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்தகுமாரின் மகனான விஜய் வசந்த், தொடக்கத்தில் திரைப்பட நடிகராகவும், வணிகப் பொறுப்புகளையும் கவனித்து வந்தார். தந்தையின் மறைவுக்குப் பிறகு கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் வெற்றி பெற்று எம்பியாகச் செயல்பட்டு வருகிறார். கட்சியில் எந்தவொரு குறிப்பிட்ட கோஷ்டியிலும் இணையாமல், தொகுதிப் பணிகளில் கவனம் செலுத்தி வந்த அவருக்குப் பெரிய அளவிலான கட்சிப் பொறுப்புகள் எதுவும் வழங்கப்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது முதன்முறையாக மாநில அளவிலான முக்கிய பொறுப்பு தேடி வந்துள்ளது.
இந்த புதிய நியமனத்துடன் சேர்த்து, அவரது குழுவில் சக்தி மாரிதாசன், முரளிதரன், சிவசக்திராஜ குணசேகரன், சஞ்சய் காந்தி, ஜான் சாமுவேல் மற்றும் அப்துல் ரகுமான் ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கட்சிப் பொறுப்புகளில் இல்லாத விஜய் வசந்துக்கு, முதன்முறையாக சமூக ஊடகப் பிரிவின் தலைவர் பதவி வழங்கப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்களிடையே மிகுந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம், மாநில காங்கிரஸில் மேற்கொள்ளப்பட்டு வரும் உட்கட்சி மாற்றங்களின் ஒரு பகுதியாகவே இந்த நியமனம் பார்க்கப்படுகிறது. புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் பொறுப்பேற்ற பிறகு, இளைஞர்களுக்கும் புதிய முகங்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் நிர்வாகிகளை மறுசீரமைப்பு செய்து வருகிறார். அந்த வகையில், மாநில காங்கிரஸ் அமைப்பில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கிலேயே விஜய் வசந்துக்கு இந்த முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
