மதுரை திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், திமுக கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ் நிர்வாகிகள் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் பேசிய நிர்வாகி ஒருவர், “திமுக-வுடன் கூட்டணியில் இருந்தால் ஒரு வேலையும் நடக்கவில்லை; அவர்களைப் பற்றி பேசக்கூட முடியவில்லை” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் (TVK) கூட்டணி வைத்தால் 70 தொகுதிகள் வரை வெற்றி பெறலாம் எனத் தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக அரசுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குரல் எழுப்பிய பின்னரே பல விவகாரங்கள் பேசுபொருளாகி வருவதாகவும், தவெக-வுடன் கைகோர்ப்பதே காங்கிரஸின் எதிர்காலத்திற்கு நல்லது என்றும் வலியுறுத்தினார். வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் சலசலப்புகள் நிலவி வரும் சூழலில், காங்கிரஸ் நிர்வாகியின் இந்த ‘விஜய் கூட்டணி’ கோரிக்கை அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
