தலைநகர் சென்னை திமுகவில் சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு பெரிய அளவிலான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், மூத்த நிர்வாகிகளின் ஆதிக்கம் இன்னமும் தொடர்வது இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் ஆதரவாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தலைநகரின் 16 தொகுதிகளில் வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, தலைவரின் சொந்தத் தொகுதியான கொளத்தூரிலும் தோல்வியைச் சந்தித்தது கட்சிக்கு பெரும் அதிர்ச்சியைளித்தது. இந்தத் தோல்விக்குப் பிறகு தலைமை அனுப்பிய கள ஆய்வுக் குழுவிடம் தொண்டர்கள் பலர் சேகர்பாபு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகிய மூத்த நிர்வாகிகள் மீது கடுமையான புகார்களை முன்வைத்தனர்.
இருப்பினும், தற்போதைய மறுசீரமைப்பில் இந்த மூத்த நிர்வாகிகளுக்கே கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கொளத்தூரில் வெற்றி வாய்ப்பை இழந்த நிலையிலும் சேகர்பாபுவுக்கு 3 தொகுதிகளை கவனிக்கும் மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. அதேபோல, 5 தொகுதிகளை இழந்து சைதாப்பேட்டையிலும் பின்னடைவைச் சந்தித்த மா.சுப்பிரமணியனுக்கும் 3 தொகுதிகள் ஒதுக்கப்படுவது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாறாக, சேப்பாக்கத்தில் வெற்றிக்கு உழைத்த உதயநிதியின் தீவிர ஆதரவாளரான சிற்றரசுவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படாமல் தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தும் சேகர்பாபுவின் தலையீட்டால் தடுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் பரந்தாமன், எமினேசர், கே.பி.சங்கர் போன்ற உதயநிதி ஆதரவாளர்கள் மாவட்டப் பொறுப்புகளுக்கு வராதபடி காய்கள் நகர்த்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
கட்சியை மீண்டும் வலுப்படுத்த இளைஞர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று தேர்தல் முடிவுகள் உணர்த்திய போதிலும், பழைய ஆட்களையே மீண்டும் அதிகாரத்தில் அமர்த்துவது மறுசீரமைப்பின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. தலைநகர் திமுகவில் சீனியர்களின் இந்த ஆதிக்கம் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினைக் கடும் கோபத்திற்கு உள்ளாக்கியிருப்பதாக உடன்பிறப்புகள் தெரிவிக்கின்றனர்.
