தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவருடைய பவுன்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்தில் ரசிகர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன். இவருடைய மகன் சரத்குமார். 24 வயதான இவர் நேற்று தன் தாய் சந்தோஷம் என்பவரோடு வந்து மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் நான் பெரியம்மாபாளையம் கிராமத்தில் கணவரை இழந்த தாயுடனும், பாட்டியோடும், சகோதரியும் வசிக்கிறேன். மதுரை மாநாட்டில் பங்கேற்க கடந்த 21-ம் தேதி சென்றேன். மாநாட்டின் முன் வரிசையில் நின்று கொண்டிருந்தேன்.
அப்போது விஜய் நடைமேடையில் நடந்து வந்தால் தலைவரை பார்த்தவுடன் ஆர்வத்தில் நடைமேடையில் ஏறினேன். உடனே விஜய் முன்னிலையில் பாதுகாப்பு பவுன்சர்கள் இரண்டு பேர் என்னை தூக்கி கீழே வீசினார்கள். இதனால் என்னுடைய வலது பக்க மார்பக விலா எலும்பு அடிபட்டு வலி அதிகமாக உள்ளது. தற்போது சிகிச்சை எடுத்து வருகிறேன். இதுகுறித்து கட்சி தலைமை பேசுவதாக கூறி தமிழக வெற்றிக்கழகம் பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் என்னிடம் சமரசம் பேசி கட்சிக்கு எதிராக பேசாமல் பார்த்துக் கொண்டார்கள் .ஆனால் எந்த உதவியும் செய்யவில்லை. தற்போது நெஞ்சுவலி அதிகமாக உள்ளது. விஜய் மீதும், அவருடைய பவுன்சர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.
