இந்திய அறுவை சிகிச்சை மருத்துவ சங்கம் சார்பில் சென்னை காவலர் ஆணையர் அலுவலகத்தில் ஏ. ஆர் ரகுமான் மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற மாநாட்டில் ஏ.ஆர் ரகுமான் கலந்து கொள்வதாக கூறியதாகவும், கடைசி நேரத்தில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவருக்கு 29 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டது. இதனையடுத்து ஏ.ஆர் ரகுமான் சார்பில் வழங்கப்பட்ட காசோலையை வங்கியில் செலுத்திய போது உரிய பணம் இல்லாமல் காசோலை திரும்ப சென்றது. அதன் பிறகு பல முறை கேட்டும் ஏ.ஆர் ரகுமான் சார்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு விளக்கம் அளித்த ஏ.ஆர் ரகுமானின் செயலாளர் செந்தில் வேலவன், மூன்று கோடி ரூபாய்க்கு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டதாகவும், நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் முன்பனத்தை திருப்பி அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். அந்த காசோலை திரும்பியது உண்மைதான். இருப்பினும் மாற்றாக பணத்தை நேரடியாக திருப்பி கொடுத்து விட்டோம் என கூறியுள்ளார்.

