மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற கம்யூனிஸ்ட் கட்சிகள் தீவிரமாக பரிசீலித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக ஆட்சி அமைக்க இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியிலிருந்து நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வந்தன. அமைச்சரவையில் பங்கேற்குமாறு தவெக அழைப்பு விடுத்தபோதிலும், அதனை ஏற்காமல் கொள்கை ரீதியிலான ஆதரவை மட்டுமே அளித்து வந்த சூழலில், தற்போது இந்த ஆதரவை வாபஸ் பெறுவதற்கான ஒப்புதலை பொலிட் பீரோவிடமிருந்து இரு கட்சிகளும் பெற்றுவிட்டதாகப் பேசப்படுகிறது.
தவெக அரசு அமைந்து ஐந்து மாதங்களே நிறைவடைந்துள்ள நிலையில், இரு தரப்பிற்கும் இடையேயான கொள்கை முரண்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததே இந்த உராய்வுக்கு முதன்மை காரணமாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்புகளின் போராட்டங்களைக் கட்டுப்படுத்த அரசு தரப்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கைகள், கம்யூனிஸ்ட் கட்சியினரைக் கணக்கெடுக்கும் நடவடிக்கைகள், சென்னை விமான நிலைய தனியார்மயமாக்கல் மற்றும் புதிய தலைமைச் செயலக விவகாரம் ஆகியவற்றில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். மேலும், மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக தவெக தலைமை காட்டி வரும் மெத்தனமான போக்கு, கம்யூனிஸ்ட்டுகளிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்த விரிசலின் வெளிப்பாடாகவே, தவெக அமைத்துள்ள ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில்’ இணைய சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் மறுத்துவிட்டன. அதுமட்டுமின்றி, இடைத்தேர்தல் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தவெகவுக்கு எதிராகத் தனித்து வேட்பாளர்களைக் களமிறக்கி கம்யூனிஸ்ட்டுகள் அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக அரசின் செயல்பாடுகள் குறித்துப் பல்வேறு பகிரங்கக் குற்றச்சாட்டுகளை கம்யூனிஸ்ட் தலைவர்கள் முன்வைத்தது, முதல்வர் விஜய்யை மிகுந்த சங்கடத்திற்கு உள்ளாக்கியதாகத் தெரிகிறது.
இடைத்தேர்தலின் முடிவுகள் எதுவாக அமைந்தாலும், தவெக அரசுக்கான ஆதரவை அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெறுவது என்பதில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் உறுதியான முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான இறுதி ஒப்புதல் கட்சியின் பொலிட் பீரோ அமைப்பிடம் இருந்து ஏற்கனவே பெறப்பட்டுவிட்டதால், இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான உடனே இரு கட்சிகளும் இணைந்து இந்த முக்கிய அறிவிப்பை வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
