தவெக கூட்டணி மற்றும் அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் மூத்த தலைவர் பெ.சண்முகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சென்னையில் நாளை (செப். 9) தவெக ஆதரவு கட்சிகளின் 2-வது கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தில் ஒரு நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்ற சூழல் கருதியே தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கப்பட்டதாக விளக்கமளித்தார். அதேவேளையில் தவெக அரசுக்கான வெளியிலிருந்தான ஆதரவு தொடர்ந்து நீடிக்கும் என்றும், ஆனால் அவர்களின் கூட்டணிக் கூட்டத்திலோ அல்லது அமைச்சரவையிலோ CPM பங்கேற்காது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
தற்போது திமுக, தவெக என எந்தவொரு பிரதான கூட்டணியிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறவில்லை என்று கூறிய அவர், இடதுசாரிக் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து செயல்படத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். இதன் முதற்கட்டமாக அடுத்த மாதத்தில் திருச்சியில் இடதுசாரிகளின் பிரமாண்ட பேரணி நடைபெறவுள்ளதையும் சுட்டிக்காட்டினார். மேலும், வரவிருக்கும் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்தும், தேர்தல் நேரத்துக்கான கூட்டணிகள் குறித்தும் கட்சியின் தலைமைக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்ட பிறகே இறுதி முடிவு முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
