தமிழ் சினிமாவில் ஒரு காட்சியிலாவது தங்களது முகத்தைக் காட்டிவிடவேண்டும் என பலரும் பல ஊர்களில் இருந்து சென்னைக்கு வருகிறார்கள். அப்படி வருபவர்களில் வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கை ஒரு சதவீதம் கூட இருக்காது. அப்படியே வந்து சிறு சிறு வேடங்களில் நடித்தவர்களையும் ரசிகர்கள் நினைவில் வைத்துக் கொள்வதில்லை. அப்படிப்பட்ட ஒரு கலைஞர்தான் பசி நாராயணன்.
சிவாசியைச் சேர்ந்த நாராயணன் நடிப்பு ஆசையில் தன்னுடைய 15வது வயதில் மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் படிப்படியாக திரையுலகில் கால்பதித்தார். ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களில் முகம் தெரியாத வேடங்களில் தலைகாட்டினார். அப்படியே தொடர்ந்த அவரது திரைப்பயணத்தில் பசி படம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
அந்த படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களைக் கவர்ந்தது. அதன் பின்னர் பசி நாராயணா என்றே அழைக்கப்பட்டார். இதுமட்டுமின்றி அம்மன் கோவில் கிழக்காலே, ஆண்பாவம், பெரியமருது என பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு அவருக்கு மிகப்பெரிய அடையாள்மாக அமைந்தது கவுண்டமணி – செந்திலுடன் இவர் இணைந்து நடித்த நகைச்சுவை வேடங்கள்தான். குறிப்பாக சூரியன் படத்தில் கவுண்டமணியோடு அவர் நடித்த ‘போன் ஒயர் பிஞ்சி ஒரு வாரம் ஆச்சு’ காமெடி இன்றளவும் ரசிகர்களால் திரும்ப திரும்ப பார்க்கப்படுகிறது. அந்த காட்சி சமூகவலைதளங்களிலும் மீம்ஸ்களாக அதிகளவில் பகிரப்படுகிறது.
நடிப்பு மட்டுமின்றி நடனம், கதை சொல்லுதல், எழுத்தாளர் என பன்முகத் திறமையாளராக விளங்கியுள்ளார். இவ்வாறு ஏராளமான படங்களில் இவர் நடித்தபோதும் இவருக்கு பெரிய அங்கீகாரமோ பொருளாதார தன்னிறைவோ கிடைக்கவில்லை. 1998 ஆம் ஆண்டு பசி நாராயணன் உடல் நலக் குறைவால் காலமானார். இதனால் அவரது குடும்பம் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.
இந்நிலையில் அவரது குடும்பத்தின் சூழலை அறிந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கியதுடன் மூத்த கலைஞர்களுக்கான குடும்ப உதவித்தொகை மாதம் ரூ. 8,125 கிடைக்கவும் வழி செய்தார்.
