கோவையில் உச்சக்கட்ட பரபரப்பு… காதலை மறுத்த மாணவிக்கு கத்திக்குத்து… கல்லூரி வளாகத்தில் மாணவன் செய்த கொடூரம்….!

By Nanthini on தை 22, 2026

Spread the love

கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவி ஒருவரை சக மாணவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த ஹர்ஷவர்தன் என்ற மாணவர், கடந்த மூன்று மாதங்களாக அந்த மாணவியைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மாணவி அவரது காதலை ஏற்க மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது விபரீதத்தில் முடிந்துள்ளது.

சம்பவத்தன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவியை வழிமறித்த ஹர்ஷவர்தன், மீண்டும் தனது காதலை ஏற்குமாறு வற்புறுத்தியுள்ளார். மாணவி திட்டவட்டமாக மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்து மற்றும் கைகளில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இரத்த வெள்ளத்தில் மாணவி அலறவே, சக மாணவர்களும் பேராசிரியர்களும் அங்கு திரண்டனர். கூட்டத்தைக் கண்ட ஹர்ஷவர்தன் உடனடியாக அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

   

காயமடைந்த மாணவி மீட்கப்பட்டு, சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து சரவணம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய மாணவன் ஹர்ஷவர்தனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் கல்லூரி வளாகத்திலேயே அரங்கேறிய இந்த வன்முறைச் சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.