கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் அருகே, கல்லூரி மாணவி ஒருவருக்கு ‘லிப்ட்’ கொடுப்பதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாகேப்பள்ளி தாலுகாவில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வரும் அந்த மாணவி, கல்லூரி முடிந்து வீட்டிற்குச் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கணேஷ் (29) என்ற நபர், மாணவியை ஏற்றிச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பீர் பாட்டிலால் தாக்கி மயக்கமடையச் செய்து இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி மயக்கம் தெளிந்த பின் தனது நண்பர்களுக்குத் தகவல் தெரிவிக்க, அவர்கள் உடனடியாக காவல்துறையினருக்குப் புகார் அளித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த பெரேசந்திரா போலீசார், குற்றவாளியான கணேஷை தீவிரமாகத் தேடி வந்தனர். இறுதியில் அவரது இருப்பிடத்தைக் கண்டுபிடித்து சுற்றி வளைத்துப் பிடித்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
