குஜராத் மாநிலம் அகமதாபாத் இசன்பூர் பகுதியைச் சேர்ந்த 21 வயதான ஜிகர் சோலங்கி என்ற நிதித்துறை மாணவர், வெள்ளிக்கிழமை இரவு நண்பனைச் சந்திக்கச் சென்ற இடத்தில் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரவு உணவிற்குப் பின் மோட்டார் சைக்கிளில் சென்ற ஜிகர் சோலங்கி, சிறிது நேரத்திலேயே தீர்த்த பூமி அபார்ட்மெண்ட் வளாகத்தில் ஆடை களையப்பட்டு, உடல் முழுவதும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். உடனடியாக எல்.ஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார். மரணமடைவதற்கு முன்பாகக் குடும்பத்தினரும் போலிஸாரும் கேட்டபோதும், தன்னைத் தாக்கியவர்கள் யார் என்ற விபரத்தை அவர் வெளியிடவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக இசன்பூர் காவல்துறையினர் மற்றும் கிரைம் பிராஞ்ச் போலிஸார் வழக்குப் பதிவு செய்து, தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
