பஞ்சாப் மாநிலம் லூதியானாவில், சாலையில் போதையில் மயங்கி விழுந்த இளைஞர் ஒருவரைக் காப்பாற்ற முயன்ற பொதுமக்கள் மீது அதிவேகமாக வந்த கல்லூரிப் பேருந்து மோதிய கோரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. லூதியானா மச்சிவாரா – குஹாரா சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே, இளைஞர் ஒருவர் போதைக் நிலையில் சாலையில் தவறி விழுந்துள்ளார்; இதனைக் கண்ட அந்த வழியாகச் சென்ற சில பொதுமக்கள், அந்த இளைஞரைப் பாதுகாப்பாக மீட்டு சாலையோரத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர்.
மக்கள் கூட்டமாக நின்று அந்த இளைஞருக்கு உதவிக்கொண்டிருந்த அந்தச் சமயத்தில், பின்னால் அதிவேகமாக வந்த கல்லூரிப் பேருந்து எந்தவொரு பிரேக்கும் இல்லாமல் நேராக அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தின் கோரக் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், பேருந்து மோதிய வேகத்தில் பலரும் தூக்கி வீசப்பட்டதாக விபத்தை நேரில் பார்த்தவர்களும் காயமடைந்தவர்களும் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், அதிவேகமாக வந்து விபத்தை ஏற்படுத்திய கல்லூரிப் பேருந்து ஓட்டுநரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
