கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரைப் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சிறுமி காணாமல் போனதாகப் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சுமார் 250 சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த பின்னரே இந்த கொடூரக் கொலையின் பின்னணி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற ஏடிஜிபி மகேஷ்வர் தயாள் ஆய்வு மேற்கொண்டார்.
சிறுமியின் வீட்டின் அருகே வசித்து வந்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்தி என்ற வாலிபர், அச்சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்றுள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், சிறுமி காணாமல் போன போது எதுவும் தெரியாதது போல குற்றவாளி கார்த்தியும் சேர்ந்து தேடுவது போல் நாடகமாடிய அதிர்ச்சித் தகவலை மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி உறுதிப்படுத்தியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற குற்றத்திற்குத் துணையாக இருந்த மோகன் என்பவரையும் தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
இஎஸ்ஐ மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் சட்டம் தன் கடமையை மிகக் கடுமையாகச் செய்து நீதிமன்றத்தின் மூலம் குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை பெற்றுத்தர காவல்துறை தரப்பில் அனைத்துத் தீவிர நடவடிக்கைகளும் விரைந்து எடுக்கப்படும் என்றும் ஐஜி ரம்யா பாரதி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
