“கடைசி நேரத்துல இப்படியா?”… கோவையில் செந்தில் பாலாஜியின் ‘கரூர் பார்முலா’… கொதிக்கும் உள்ளூர் நிர்வாகிகள்…. ஹேப்பி மோடில் எடப்பாடி….!

By Nanthini on மாசி 20, 2026

Spread the love

கோவை மாவட்ட திமுகவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூர் ஆதரவாளர்களுக்கும், உள்ளூர் நிர்வாகிகளுக்கும் இடையே மூண்டுள்ள மோதல் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு கோவையில் திமுகவை வலுப்படுத்தும் பொறுப்பு செந்தில் பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த உள்கட்சி பூசல் தலைமைக்கு புதிய தலைவலியை உருவாக்கியுள்ளது.

தேர்தல் பணிகளுக்காக கரூரிலிருந்து செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களைக் கோவைக்கு வரவழைத்து, அவர்களை மேற்பார்வை பணிகளில் ஈடுபடுத்தியுள்ளார். இவர்கள் உள்ளூர் திமுகவினர் சேகரிக்கும் வாக்காளர் தரவுகளை ஆய்வு செய்வதுடன், சில சமயங்களில் நிர்வாகிகளைக் கடினமான வார்த்தைகளால் விமர்சிப்பதாகக் கூறப்படுகிறது. சொந்த மாவட்டத்தில் வெளியாட்களின் ஆதிக்கம் அதிகரிப்பதைக் கண்டு கோவை திமுகவினர் கடும் அதிருப்தியிலும் மன உளுச்சலிலும் உள்ளனர்.

   

குறிப்பாக, பூத் வாரியாக விவரங்களைச் சேகரித்துத் தரும் உள்ளூர் உடன்பிறப்புகளின் உழைப்பை, கரூர் குழுவினர் அங்கீகரிக்காமல் நிராகரிப்பது மோதலுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் இதே ‘கரூர் பார்முலா’ வெற்றியைத் தேடித்தந்தாலும், தற்போதைய சட்டசபை தேர்தல் சூழலில் இது உள்ளூர் நிர்வாகிகளிடையே பிளவை ஏற்படுத்தியுள்ளது திமுகவிற்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

   

திமுகவில் ஏற்பட்டுள்ள இந்த விரிசலைச் சாதகமாகப் பார்க்கும் அதிமுகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். தேர்தல் நேரத்தில் உள்கட்சி மோதல் கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்துள்ள செந்தில் பாலாஜி, அதிருப்தியில் உள்ள கோவை நிர்வாகிகளைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். பிப்ரவரி இறுதியில் கோவையில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட மாநாடுகளுக்கு முன்பாக இந்த சிக்கலைத் தீர்க்க திமுக தலைமை தீவிரம் காட்டி வருகிறது.