“112 சாட்சிகள், 270 பக்க குற்றப்பத்திரிகை”…. கோவை கூட்டு பாலியல் வழக்கில் இன்று இறுதித் தீர்ப்பு…. தமிழகமே எதிர்பார்க்கும் அதிரடி முடிவு…..!

By Nanthini on பங்குனி 7, 2026

Spread the love

தமிழகத்தையே உலுக்கிய கோவை கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில், இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கோவை அனைத்து மகளிர் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கவுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோவை பீளமேடு விமான நிலையத்திற்கு பின்புறம், ஆண் நண்பருடன் காரில் அமர்ந்திருந்த 21 வயது கல்லூரி மாணவி, மதுபோதையில் இருந்த மூன்று மர்ம நபர்களால் கடத்தப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சம்பவம் நடந்த சில நாட்களில், சிவகங்கையைச் சேர்ந்த சதீஷ் (எ) கருப்பசாமி, கார்த்திக் (எ) காளீஸ்வரன் மற்றும் மதுரையைச் சேர்ந்த குணா (எ) தவசி ஆகிய மூன்று குற்றவாளிகளும் துடியலூர் அருகே போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பிடிபட்ட போது தப்பிக்க முயன்ற அவர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர். இது தொடர்பாக பீளமேடு காவல் துறையினர் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

   

இந்த வழக்கில் 270 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தடய அறிவியல் ஆதாரங்கள் மற்றும் மரபணு பரிசோதனை முடிவுகள் உட்பட வலுவான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மாணவி, அவரது ஆண் நண்பர் மற்றும் தாயார் உட்பட 112 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த மாதம் தொடங்கப்பட்ட இந்த விசாரணை, மிக விரைவாக 21 நாட்களில் நிறைவடைந்தது.

   

இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நீதிபதி சுந்தர்ராஜன் இந்த வழக்கிற்கான தீர்ப்பை இன்று பிற்பகல் 2.30 மணிக்கு அறிவிக்கிறார். சம்பவம் நடந்த மூன்று மாதங்களுக்குள்ளேயே இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. குற்றம்சாட்டப்பட்ட மூவரும் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்த தமிழகமும் இந்த வழக்கின் தீர்ப்பை மிகுந்த எதிர்பார்ப்புடன் உற்றுநோக்கி வருகிறது.