கோவை சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்ட நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கார்த்தி (33) மற்றும் அவனுக்கு உடந்தையாக இருந்த நண்பன் மோகன்ராஜ் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். போலீஸ் பிடியில் இருந்து தப்ப முயன்ற போது மாடியில் இருந்து குதித்த கார்த்திக்கு கை, கால் எலும்பு முறிவு ஏற்பட்டு, தற்போது மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறான். குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனையை விரைந்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடையே வலுத்து வருகிறது.
காவல்துறையினரிடம் கைதான கார்த்தி அளித்துள்ள வாக்குமூலம், அவன் நடத்திய கொடூரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. கடந்த 21-ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த அந்தச் சிறுமியிடம், சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி கார்த்தி தனது வண்டியில் அழைத்துச் சென்றுள்ளான். வழியில் மிட்டாய் வாங்கிக் கொடுத்துவிட்டு, குளக்கரை பகுதிக்குக் கூட்டிச் சென்று சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை இழைத்துள்ளான். அப்போது குழந்தை வலியால் அலறியதால், பயந்துபோன கார்த்தி குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, சடலத்தை அங்கிருந்த முள் புதருக்குள் வீசிவிட்டுத் தப்பியோடியதாகத் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான்.
கொலைக்குப் பிறகு அங்கிருந்து தப்பிய கார்த்தி, தனது நண்பன் மோகன்ராஜைச் சந்தித்து நடந்த விபரங்களைக் கூறி உதவி கேட்டுள்ளான். மோகன்ராஜும் இக்கொடூரச் சம்பவத்தை யாரிடமும் சொல்லாமல் மறைத்து, குற்றவாளிக்கு உதவி செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையே, கடந்த 21-ஆம் தேதி இரவு சிறுமியைக் காணவில்லை என்று பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி உத்தரவின்படி 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதன் பலனாக, 22-ஆம் தேதி மாலை கண்ணம்பாளையம் குளம் அருகே சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது.
இந்த வழக்கு குறித்துப் பேசிய ஐஜி ரம்யா பாரதி, தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் கார்த்தி பதுங்கியிருந்த வீட்டைச் சுற்றி வளைத்துக் கைது செய்ததாகக் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அந்தப் பகுதிக்குக் குடிவந்து 20 நாட்களே ஆன நிலையில், இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது. மனைவியைப் பிரிந்து வாழும் கார்த்தி, சம்பவத்தின் போது எந்தவித போதைப் பொருளையும் பயன்படுத்தவில்லை என்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது. குற்றவாளிகள் இருவர் மீதும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணம் பெற்றுத் தரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
