அமெரிக்காவில் படித்து வரும் அபிஜித் தீப்கே என்பவரால், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ என்ற பக்கம் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் வேடிக்கையான பதிவுகளுடன் தொடங்கப்பட்ட இப்பக்கத்தை, குறுகிய காலத்திலேயே பலரும் பின்தொடரத் தொடங்கினர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் ஒரு வழக்கின் விசாரணையின்போது கூறிய கருத்துகளின் பின்னணியில் இப்பக்கம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில், நீட் வினாத்தாள் கசிவு, போட்டித் தேர்வுகள் மற்றும் சிபிஎஸ்இ தேர்வு விவகாரம் போன்ற கல்வித்துறை சார்ந்த முக்கியப் பிரச்சினைகளை முன்னிறுத்தி, மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இக்கட்சியினர் மாநிலம்தோறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது, மாணவர்களிடையே உரையாற்ற மேடையை நோக்கிச் சென்ற அக்கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கேவை, கூட்டத்தில் இருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென ஓங்கி அறைய முயன்று தாக்கினார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலானது.
தன்னைத் தாக்கிய இந்தச் சம்பவம் குறித்து இன்று பதிலளித்துள்ள அபிஜித், “ஜெய்ப்பூரில் நடந்தது நாட்டில் அதிகரித்து வரும் வேலையின்மையின் விளைவே ஆகும். தாக்குதல் நடத்திய நபருக்கு ஒரு நல்ல வேலை இருந்திருந்தால், அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்க மாட்டார். எனவே, சிறந்த வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். இளைஞர்களுக்குப் பணம் சம்பாதிப்பதற்கு முறையான வழிகள் இல்லாததால், இதுபோன்ற செயல்களைச் செய்ய அவர்களுக்கு 1,000 முதல் 2,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. அத்தகைய இளைஞர்களுக்குச் சிறந்த வேலைகளை வழங்குமாறு அரசை கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
