தமிழகத்தின் புதிய முதல்வராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தமிழக அரசின் அதிகாரப்பூர்வ ‘சிஎம்ஓ தமிழ்நாடு’ (CMO Tamil Nadu) சமூக வலைத்தளப் பக்கங்கள் இதுவரை கண்டிராத மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. முன்னதாக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் புகைப்படங்களைக் கொண்டிருந்த இந்த இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் (ட்விட்டர்) பக்கங்களில், விஜய் பதவியேற்றவுடன் அவரது புகைப்படங்கள் புரொபைல் படங்களாக மாற்றப்பட்டன. இந்த அதிரடி மாற்றத்தைத் தொடர்ந்து, தளபதி விஜய்யின் வருகையை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் எழுச்சியுடன் வரவேற்று வருகின்றனர்.
குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வியக்கத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விஜய் முதல்வராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு 4.1 லட்சமாக இருந்த பாலோயர்களின் எண்ணிக்கை, அவர் பதவியேற்ற 24 மணி நேரத்திற்குள் 10 லட்சமாக (1 மில்லியன்) உயர்ந்தது. இந்த வேகம் குறையாமல், நேற்று நள்ளிரவுக்குள் அந்த எண்ணிக்கை 14 லட்சத்தைத் (1.4 மில்லியன்) தாண்டியது. அதேபோல் எக்ஸ் தளத்திலும் பாலோயர்களின் எண்ணிக்கை 21 லட்சத்தைக் கடந்து சாதனை படைத்துள்ளது. விஜய்யின் அரசியல் வருகை டிஜிட்டல் தளங்களில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு இதுவே சான்றாகும்.
முதல்வர் விஜய் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டது, தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் நாற்காலியில் அமர்ந்தது மற்றும் பெரியார் திடலில் மரியாதை செலுத்தியது உள்ளிட்ட புகைப்படங்கள் இந்தப் பக்கங்களில் பதிவேற்றப்பட்டுள்ளன. மேலும், சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்ற பிறகு மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், வைகோ, அன்புமணி ராமதாஸ் மற்றும் சீமான் போன்ற அரசியல் தலைவர்களை அவர் சந்தித்த புகைப்படங்களும் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. அரசு நலத்திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இந்தப் பக்கம், தற்போது ஒரு புதிய அரசியல் மாற்றத்தின் அடையாளமாக மாறியுள்ளது.
இந்த சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிரப்படும் ஒவ்வொரு பதிவும் லட்சக்கணக்கான லைக்குகளை அள்ளி வருகின்றன. குறிப்பாக, விஜய் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் புகைப்படத்திற்கு மட்டும் எக்ஸ் தளத்தில் 1.22 லட்சத்திற்கும் அதிகமானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே தனது சினிமா வாழ்க்கை மற்றும் கட்சிப் பணிகளுக்காகத் தனிப்பட்ட சமூக வலைத்தளப் பக்கங்களில் பெரும் செல்வாக்கைக் கொண்டிருந்த விஜய், தற்போது தமிழக முதல்வராக அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களையும் இந்திய அளவில் கவனம் பெறச் செய்துள்ளார்.
