தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 108 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்றதோடு, சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்துத் தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய். பல அரசியல் தடைகளையும் சவால்களையும் தாண்டி முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துள்ள விஜய்யின் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளும் மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளும் பொதுமக்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் எங்கு ‘அண்ணா’ என்று அழைத்தாலும் உடனடியாக அதற்குப் பதிலளித்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வரும் அவரது புகழ், தற்போது அண்டை நாடான இலங்கை நாடாளுமன்றம் வரை எதிரொலித்து விவாதப் பொருளாக மாறியுள்ளது.
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகும் விஜய் தனது எளிமையை கைவிடாமல், முதலமைச்சர் அலுவலகத்திற்கு வரும்போது வீட்டிலிருந்தே சாப்பாட்டைக் கையில் எடுத்து வருவதாகக் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், 50 வயதைக் கடந்தும் அவரது கட்டுக்கோப்பான உடல் அமைப்பிற்கும் (Fitness) சுறுசுறுப்பிற்கும் பின்னால் இருக்கும் உணவு ரகசியங்கள் குறித்த சுவாரசியமான விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. முதலமைச்சர் விஜய் கடுமையான டயட் முறைகளைப் பின்பற்றுவதில்லை என்றாலும், வீட்டில் சமைக்கப்படும் மிகவும் எளிய மற்றும் ஆரோக்கியமான உணவுகளையே அதிகம் விரும்பிச் சாப்பிடுகிறார்.
அவரது தினசரி உணவுப் பட்டியலின்படி, காலை உணவாக உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கும் இட்லி, முட்டை மற்றும் சில பழங்களை எடுத்துக் கொள்கிறார். மதிய உணவில் அரிசி சாதத்துடன், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைத் தரும் காய்கறிகள், புரதச்சத்து நிறைந்த சிக்கன் அல்லது மீன் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்கிறார். மாலை நேரங்களில் பசி எடுத்தால் சாலட், பழச்சாறு அல்லது இளநீர் அருந்தும் அவர், இரவு நேரத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய சூப் மற்றும் சாலட் போன்ற எளிய உணவுகளை மட்டுமே மிதமான அளவில் சாப்பிடுகிறார். முக்கியமாக, ஜங்க் ஃபுட்ஸ் மற்றும் வெளி உணவுகளை முற்றிலும் தவிர்ப்பதே அவரது ஆரோக்கியத்தின் முக்கிய ரகசியமாக உள்ளது.
