“பெரம்பூர் தொகுதிக்கு முதலமைச்சர் விஜய் போட்ட திடீர் உத்தரவு”… ரூ.1,013 கோடியில் மாறப்போகும் முகம்….. என்னென்ன வரப்போகிறது தெரியுமா?….!

By Nanthini on ஆடி 14, 2026

Spread the love

பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பெரம்பூர் மக்களின் நலனுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் பல்வேறு முன்னோடித் திட்டங்களை அறிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தனது தொகுதி மேம்பாட்டு நிதியான 3 கோடி ரூபாயை உடனடியாக ஒதுக்கீடு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். தொகுதி மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், கல்வி, விளையாட்டு, மருத்துவம் மற்றும் உள்கட்டமைப்பு என அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய விரிவான செயல் திட்டங்கள் இந்த நிதியின் மூலம் செயல்படுத்தப்பட உள்ளன.

இந்தத் திட்டங்களின் முக்கியப் பகுதியாக, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, சிட்கோ நகர், எம்.கே.பி. நகர் உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் சிசிடிவி கேமராக்கள், வைஃபை வசதி மற்றும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையுடன் கூடிய 6 நவீன பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்படவுள்ளன. மேலும், சத்தியமூர்த்தி நகரில் ஏழை எளிய மக்களின் மருத்துவத் தேவைக்காக 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன டயாலிசிஸ் (சிறுநீரகச் சுத்திகரிப்பு) மையம் ஒன்றும், எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் தற்காலிகப் பணியாளர்களுக்கான (Gig Workers) பிரத்யேக ஓய்வறையும் அமைக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.

   

தொகுதியின் இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் வகையில் கல்வி மற்றும் விளையாட்டுத் துறைக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் முக்கியத்துவம் அளித்துள்ளார். மேயர் கிருஷ்ணமூர்த்தி நகரில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய விளையாட்டு வளாகமும், அம்பேத்கர் கலைக் கல்லூரியில் 25 லட்சம் ரூபாய் செலவில் கூடைப்பந்து மைதானம், கிரிக்கெட் பிட்ச், கபடி மைதானம் போன்ற விளையாட்டு வசதிகளும் மேம்படுத்தப்படவுள்ளன. அதே கல்லூரியில் மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வகையில் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் அதிநவீன நூலகம் மற்றும் பயிலரங்கம் உருவாக்கப்படவுள்ளதுடன், தொகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன.

   

தொகுதி மேம்பாட்டு நிதி மட்டுமின்றி, பெரம்பூர் தொகுதியின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல 1,013 கோடி ரூபாய் மதிப்பிலான 50 பிரம்மாண்ட திட்டங்களையும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இத்திட்டங்களில், நகர்ப்புற உள்கட்டமைப்பிற்கு 211 கோடி ரூபாயும், வீட்டு வசதி மேம்பாட்டிற்கு 544 கோடி ரூபாயும், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளுக்கு 88 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் பெரம்பூர் தொகுதியின் முகவரியை மாற்றுவதுடன், மக்களின் வாழ்வாதாரத்தை பெருமளவில் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.