தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை வரும் செப்டம்பர் 28ஆம் தேதி உசிலம்பட்டியில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான இத்திட்டத்திற்காக ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் ஜோய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு 70:30 என்ற விகிதத்தில் வழங்கப்பட்டு, முதற்கட்டமாக 1.20 லட்சம் மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டம் முதலில் சென்னையில் தொடங்கி வைக்கப்படுவதாகவே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்க விழா சென்னையில் நடைபெற உள்ளதால், தாய்மாமன் தங்க மோதிர திட்டத் தொடக்க விழாவை மதுரை மாவட்டத்திற்கு மாற்றத் தீர்மானிக்கப்பட்டது. இதனையடுத்தே உசிலம்பட்டியில் விழாவை நடத்த முடிவெடுக்கப்பட்டு, முதல்வர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிக்குத் தேவையான பொருத்தமான இடங்களைத் தேர்வு செய்யும் பணிகளில் காவல்துறையினர் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திடீரென உசிலம்பட்டியைத் தேர்வு செய்ததன் பின்னணியில் சுவாரசியமான பின்னணி நிலவுகிறது. கிராமப்புறங்களில் ‘தாய்மாமன்’ என்ற உறவுமுறை மிகுந்த மரியாதையுடனும் கொண்டாட்டத்துடனும் பார்க்கப்படும் ஒன்றாகும். பெண்களை முதன்மையாக மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தை ஒரு கிராமப்புறப் பகுதியில் தொடங்கி வைப்பதன் மூலம், ஏழை எளிய பெண்கள் மற்றும் தாயார்கள் மத்தியில் இத்திட்டம் குறித்த விழிப்புணர்வையும் வரவேற்பையும் மிக எளிதாகக் கொண்டு சேர்க்க முடியும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
அரசியல் ரீதியாகவும் இந்த முடிவு தவெகவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. கிராமப்புறங்களில் கட்சியின் கட்டமைப்பு பலத்தை மேலும் அதிகரிக்க வேண்டிய சூழலில், விஜயின் இந்த உசிலம்பட்டி வருகை மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உசிலம்பட்டி அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமாரின் சொந்த ஊர் என்பதால், அங்கு இத்திட்டம் தொடங்கப்படுவது அவரது அரசியல் செல்வாக்கையும் அப்பகுதியில் கட்சியின் நிலையையும் மேலும் வலுப்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
