ஆந்திர மாநிலம், விஜயவாடாவுக்குச் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார். சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இச்சந்திப்பின் போது, கோதாவரி – காவிரி நதிகள் இணைப்புத் திட்டம், நீர் மேலாண்மை மற்றும் சென்னையின் குடிநீர் தேவைகள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர். குறிப்பாக, தென்னக மாநிலங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கோதாவரி நீரை காவிரிக்குத் திருப்புவதற்கான ஆந்திர அரசின் முன்மொழிவுகள் மற்றும் தெலுங்கு கங்கா திட்டம் மூலம் கூடுதல் தண்ணீர் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இச்சந்தித்தைத் தொடர்ந்து, விஜயவாடா புன்னமி காட்டில் நடைபெற்ற ‘விஜயவாடா உற்சவ் 2.0’ விழாவில் இரு முதலமைச்சர்களும் பங்கேற்றனர். கிருஷ்ணா நதிக்கரையில் நடைபெற்ற பாரம்பரிய கலாச்சார நிகழ்ச்சிகளைப் பார்வையிட்ட தமிழக முதலமைச்சர் விஜய், தனது உரையை “அந்தரிக்கி நமஸ்காரம்” எனத் தெலுங்கில் தொடங்கி, தசரா நவராத்திரி கொண்டாட்டங்களில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார். மேலும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் நதிகள் இணைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விழாவில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கட்சித் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் முதலமைச்சராகப் பொறுப்பேற்று தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்து வரும் விஜய்யைப் பாராட்டினார். துர்கா தேவியின் அருளால் கோதாவரி – காவிரி நதிகள் இணைப்புத் திட்டம் விரைவில் நனவாகும் என நம்பிக்கை தெரிவித்த அவர், ஐந்து நதிகளை இணைப்பதன் மூலம் 2047-க்குள் இந்தியா உலகின் முதன்மை நாடாக மாறும் என்றும் தன் உரையில் குறிப்பிட்டார்.
