தமிழக அரசியல் களம் தற்போது கரூர் மாவட்டத்தை நோக்கி ஒட்டுமொத்தமாகத் திரும்பியுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் கரூரில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், திடீரென தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவிலிருந்து விலகியுள்ளார். இதனால் கரூர் சட்டமன்றத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், தமிழக அரசியல் வரலாற்றிலேயே முன் எப்போதும் இல்லாத ஒரு மகா யுத்தத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தற்போதைய முதல்வருமான சி. ஜோசப் விஜய் அதிரடி வியூகம் அமைத்து வருவதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவிலிருந்து விலகிய எம்.ஆர்.விஜயபாஸ்கர் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாகவும், அவரே தவெக சார்பில் கரூர் இடைத்தேர்தல் வேட்பாளராகக் களம் இறங்குவார் என்றும் தகவல்கள் கசிகின்றன. முன்னதாக கரூரில் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் 40 பேர் பலியான சம்பவத்திற்குப் பிறகு, அந்தப் பக்கமே செல்லாமல் இருந்த விஜய், தற்போது முதல்வராக கரூர் செல்லத் திட்டமிட்டுள்ளார். இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக கரூர் செல்லும் முன்பாக, அங்கு அரசியல் ரீதியாகப் பல அதிரடி மாற்றங்களையும், கட்சி தாவல் நடவடிக்கைகளையும் அரங்கேற்ற தவெக தலைமை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த அரசியல் நகர்வுகளின் ஒரு பகுதியாக, கரூரில் திமுகவின் அசுர பலமாக விளங்கும் முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜியை முடக்க முதல்வர் விஜய் தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. செந்தில் பாலாஜி தற்போதைய தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் வென்றிருந்தாலும், அவரது சொந்த ஊரான கரூரில் அவர்தான் திமுகவின் தேர்தல் இயந்திரத்தை இயக்குபவர். அவர் களத்தில் இருந்தால் கரூரில் திமுகவை வீழ்த்துவது எளிதல்ல என்பதை உணர்ந்துள்ள தவெக தலைமை, போக்குவரத்துத் துறை வேலை வாய்ப்பு மோசடி தொடர்பான வழக்கில் அவரை சட்டப்படி முடக்கக் காய்களை நகர்த்தி வருகிறது.
முன்னாள் அமைச்சர்களைக் கைது செய்ய ஆளுநரின் அனுமதி தேவை என்பதால், செந்தில் பாலாஜி மீதான வழக்கில் விசாரணை நடத்த அனுமதி கோரும் கோப்பிற்கு ஒப்புதல் அளிக்குமாறு தமிழக அரசு அண்மையில் ஆளுநருக்கு அவசர கடிதம் அனுப்பியிருந்தது. இந்த அனுமதியை ஆளுநரிடம் பேசி விரைவாகப் பெறவும், அனுமதி கிடைத்தவுடன் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கைது உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாகப் பேசப்படுகிறது. கரூர் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே செந்தில் பாலாஜியின் தேர்தல் வேலைகளுக்கு முட்டுக்கட்டை போட்டு, கரூரைக் கைப்பற்ற தவெக அரசு எடுத்து வரும் இந்த அதிரடி முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
