தூத்துக்குடி துறைமுகத்தில் சுமார் ரூ.11,737 கோடி மதிப்பீட்டில் வெளித்துறைமுக உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பிரம்மாண்ட திட்டம் தொடங்கப்பட உள்ளது. சர்வதேச கடல் வணிகத்தை அதிகரிப்பதுடன் சரக்குகளைக் கையாளும் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள இத்திட்டத்தில், அலை தடுப்புச் சுவர்கள் அமைத்தல் மற்றும் கடலைத் தூர்வாருதல் போன்ற முக்கியப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த மெகா திட்டத்தைக் கைப்பற்றுவதற்காக அதானி போர்ட்ஸ், விஸ்வா சமுத்திரா மற்றும் மேகா இன்ஜினியரிங் ஆகிய மூன்று முன்னணி பெரு நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்தச் சூழலில், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினர் வீட்டுத் திருமண விழாவில் தமிழக முதல்வர் விஜய்யும், பிரபல தொழிலதிபர் கௌதம் அதானியும் பங்கேற்றுள்ளனர். இருவரையும் ஜெகன்மோகன் ரெட்டி மகிழ்ச்சியுடன் வரவேற்ற நிலையில், இந்தச் சந்திப்பின் போது மூவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்துத் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விழாவில், அதானியின் நிறுவனத் திட்டங்களுக்கு ஆதரவளிக்குமாறு ஜெகன்மோகன் ரெட்டி மூலமாக முதல்வர் விஜய்யிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தூத்துக்குடி துறைமுக திட்டத்தைக் கைப்பற்றத் தேவையான உதவிகளைச் செய்ய முடியுமா என்று அதானி தரப்பில் கேட்கப்பட்டதற்கு, துறை சார்ந்த உயரதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பிறகு இது குறித்துத் தகவல் தெரிவிப்பதாகச் சற்றே நிதானமாகப் பதிலளித்துள்ளார் முதல்வர் விஜய்.
ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலேயே தமிழகத்தில் தங்களின் தொழில் தடத்தைப் பதித்த அதானி குழுமம், எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலங்களிலும் மின் உற்பத்தி முதல் துறைமுகம் வரை தங்களது தொழில்களை விரிவுபடுத்தியது. இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி திட்டம் மட்டுமன்றி சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய விமான நிலையங்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டங்களிலும் தங்களுக்கு வாய்ப்பளிக்குமாறு அதானி தரப்பில் விஜய்யிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் முக்கிய மெகா ப்ராஜெக்ட்டுகளைக் கைப்பற்றுவதற்காக அதானி குழுமம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், முதல்வர் விஜய்ய உடனான இந்தச் சந்திப்பும் அதன் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது. தொழிலதிபர் அதானியின் இந்தக் கோரிக்கைகள் மற்றும் முயற்சிகள் முதல்வர் விஜய்யிடம் எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பது குறித்து இன்னும் ஒரு மாத காலத்தில் தெளிவான படம் தெரியவரும் என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
