தமிழக முதல்வர் விஜய் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி நான்கு நாள் பயணமாக பிரிட்டன் செல்கிறார். அங்குத் தொழில் முதலீட்டாளர்களைச் சந்தித்துத் தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்க உள்ள அவர், தனது வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு செப்டம்பர் 16-ஆம் தேதி சென்னை திரும்புகிறார். அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 17-ஆம் தேதி விருதுநகர் செல்ல அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. எனினும், அவரது இந்தப் பயணத் திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் உறுதியாகவில்லை.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்குச் செயல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவுத் திட்டம், காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்டு, எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் சத்துணவுத் திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது. பின்னர் வந்த திமுக ஆட்சிக் காலத்தில் அன்றைய முதல்வர் ஸ்டாலினால் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த பிறகு, இத்திட்டம் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதுடன், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது.
பெருந்தலைவர் காமராஜர் படித்த விருதுநகர் கே.வி.எஸ். பள்ளியில், தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி இந்த விரிவாக்கப்பட்ட காலை உணவுத் திட்டத்தை முதல்வர் விஜய் நேரில் தொடங்கி வைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தில் சுமார் 15,14,274 மாணவ-மாணவிகள் பயனடைவார்கள். முதல்வர் வருகை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்றாலும், இதற்கான முன்னேற்பாடுகளில் கல்வித்துறை அதிகாரிகளும் விருதுநகர் மாவட்ட நிர்வாகமும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதேநாளில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது. விருதுநகர் வரும் விஜய், மதுரை கோவிலுக்குச் செல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தாலும், கும்பாபிஷேக நாளில் வழக்கமாகவே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அங்குக் கூடுதல் நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு அவர் செல்வதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டன் பயணம் முடிந்த கையோடு, முதல்வரின் விருதுநகர் பயணம் குறித்த இறுதித் திட்டம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
