தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் இடைத்தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தங்களது அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடியான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அண்மையில் அமைச்சர்கள் கீர்த்தனா, ஸ்ரீநாத் மற்றும் தமிழன் பார்த்திபன் ஆகியோரின் செய்தியாளர் சந்திப்பு வீடியோக்கள் சமூக ஊடகங்களில் கடுமையாக டிரோல் செய்யப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
இனிவரும் நாட்களில் அமைச்சர்கள் யாரும் தேவையற்ற சமுதாய நிகழ்ச்சிகளில் பங்கேற்கக்கூடாது என்றும், எவ்வித புதிய சர்ச்சைகளிலும் சிக்காமல் கூடுதல் கவனத்துடனும் பொறுப்புடனும் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அதேநேரத்தில், அரசியல் ரீதியான விமர்சனங்களுக்கு இடம் கொடுக்காமல், மக்கள் நலப்பணிகளில் மட்டுமே தங்களின் முழு கவனத்தையும் செலுத்தி தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் அமைச்சர்களுக்கு கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
