தமிழக அரசியல் வரலாற்றில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புதிய திருப்பமாக, தமிழகத்தில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த புதிய அரசியல் மாற்றத்தின் விளைவாக, விஜய்யின் மக்கள் இயக்க மன்ற நிர்வாகிகளாக இருந்த பலரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களாகவும், ஒருசிலர் முக்கிய துறைகளின் அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றுள்ளனர். முதல்முறை எம்.எல்.ஏ மற்றும் முதல்முறை அமைச்சர் என்பதால் ஆரம்பத்தில் தங்களின் பணிகளை எவ்வாறு கையாள்வது என்பதில் பலருக்கு சில தயக்கங்களும் குழப்பங்களும் நீடித்து வருகின்றன. இருப்பினும், போகப்போக அவர்கள் தங்களின் பொறுப்பையும், துறையின் செயல்பாடுகளையும் முழுமையாக உணர்ந்து, மக்கள் பணியையும் அரசியலையும் மிகச் சிறப்பாகக் கற்றுக்கொள்வார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இத்தகைய சூழலில்தான், அண்மையில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ‘கில்லி’ சரத், போதைப்பொருள் தயாரிப்பது போன்ற ஒரு சர்ச்சைக்குரிய வீடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த எதிர்க்கட்சியான திமுக, தீவிரப் போராட்டங்களை நடத்திய போதிலும், இதுவரை தவெக தலைமை அவர் மீது எந்தவித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்து வருகிறது. இந்த விவகாரம் மக்கள் மத்தியில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், கட்சியின் தற்போதைய நகர்வுகள் உற்றுநோக்கப்பட்டு வருகின்றன.
அதேநேரம், மக்கள் மத்தியில் அரசுக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குபவர்களின் பட்டியலை முதலமைச்சர் விஜய் ரகசியமாகத் தயாரித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஒருபுறம் தங்களின் உதவியாளர்கள் மற்றும் உறவினர்களைத் துறை ரீதியான செயல்பாடுகளில் ஆதிக்கம் செலுத்த விட்டு, அதனை வேடிக்கை பார்க்கும் அமைச்சர்களின் பட்டியலும் தனியாகத் தயாராகி வருகிறதாம். அனேகமாக வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்தவுடன், தமிழக அமைச்சரவையில் நிச்சயமாக ஒரு பெரிய மாற்றம் இருக்கும் என்றும், அதில் சுமார் ஏழு முதல் எட்டு அமைச்சர்களின் பதவிகள் பறிபோக வாய்ப்புள்ளதாகவும் தவெக உள்வட்டாரங்கள் பரவலாகப் பேசி வருகின்றன.
