தமிழகத்திற்கு வருகை தரும் குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர் உள்ளிட்ட VVIP மற்றும் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு, மேடைப் பந்தல், உணவு மற்றும் உபசரிப்புச் செலவுகளுக்காக ரூ.6.85 கோடி நிதியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுவரை இத்தகைய நிகழ்ச்சிகளுக்கான செலவுத் தொகையைப் பெறுவதில் நீண்ட தாமதம் ஏற்பட்டதால், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் தங்கள் சொந்தப் பணத்தைச் செலவிட்டுப் பின்னர் பணத்தைத் திரும்பப் பெற முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
அதிகாரிகளின் இந்த நீண்ட நாள் வேதனையைப் போக்கும் வகையில், தற்போது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முன்னெச்சரிக்கையாக தலா ரூ.15 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை முன்கூட்டியே நிதி பிரித்து வழங்கப்பட்டுள்ளது. அரசின் இந்த உடனடி நடவடிக்கை மூலம் இனி நிர்வாகச் சிக்கல்கள் தவிர்க்கப்பட்டு, அரசு விழாக்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களின் வருகைக்கான ஏற்பாடுகள் எவ்விதத் தடங்கலுமின்றி விரைவாக மேற்கொள்ளப்படும்.
