தமிழகத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்தச் சந்திப்பின் போது நடந்த சுவாரஸ்யமான உரையாடல்கள் குறித்து மு.க. ஸ்டாலின் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேர்தல் பிரச்சாரத்தின் போது தம்மைக் கடுமையாக விமர்சித்துப் பேசியதற்காக விஜய் தம்மிடம் வருத்தம் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். “ரொம்ப சாரி சார்” என்று விஜய் கூறியதற்கு, “அதையெல்லாம் விடுங்க ப்ரதர், இப்போது நீங்கள் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர்; யாரைப் பற்றிப் பேசினாலும் கண்ணியத்தோடு பேசுங்கள்” என்று அறிவுறுத்தியதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய மு.க. ஸ்டாலின், ஒரு முதலமைச்சருக்கான வார்த்தைகளும் உடல்மொழியும் எப்போதும் கண்ணியமிக்கதாக இருக்க வேண்டும் என்றும், தலைவர்களே மக்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தற்போதைய ஆட்சி முறையைக் கடுமையாக விமர்சித்த அவர், சட்டசபையை ரீல்ஸ் எடுக்கும் இடமாக மாற்றி, அரசு கட்டிய பாலங்களின் மீதே நின்று போட்டோஷூட் நடத்துவது போன்ற செயல்பாடுகள் ஆட்சி நிர்வாகத்தையே சினிமா சூட்டிங் போல நடத்தும் போக்கைக் காட்டுவதாகக் குற்றம்சாட்டினார். தலைவர்கள் தங்களின் பெரிய பொறுப்பினை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே நாட்டின் நலனுக்கு அவசியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, தினமும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் கவலை தெரிவித்த மு.க. ஸ்டாலின், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்ததன் மூலம் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 15 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிவிட்டதாகச் சாடினார். ரீல்ஸ் மற்றும் விளம்பரங்கள் மூலம் ஒரு தலைமுறையையே ஏமாற்ற முடியாது என்றும், உண்மை வெளிவருவதற்குள் பொய் பரப்பப்பட்டாலும் இறுதியில் நிஜ நிலைமை மக்களுக்கேத் தெரியும் என்றும் அவர் கூறினார்.
தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கும் தற்போதைய நடைமுறைக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். விவசாயக் கடன் தள்ளுபடி முறையாக நிறைவேற்றப்படவில்லை என்றும், ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் மற்றும் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.2,500 தருவதாக உறுதியளித்துவிட்டு, தற்போது தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் எனக் கூறி வாக்குறுதிகளைக் குறைத்து வழங்கப்படுவதாகக் குற்றம்சாட்டினார். மாற்றம் வேண்டும் என வாக்களித்த இளைஞர்களும் பொதுமக்களும் எது திறமையான அரசு, எது திறமையற்ற அரசு என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் எனத் தன் உரையை நிறைவு செய்தார்.
