ஒன்றிய அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ள தேசிய உணவு பாதுகாப்புச் சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்யக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். தற்போதுள்ள நடைமுறைப்படி, ‘அந்தியோதயா அன்ன யோஜனா’ ரேஷன் அட்டைதாரர்களுக்குக் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளாமல் மாதம் 35 கிலோ இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், புதிய திருத்தத்தின்படி நபர் ஒருவருக்கு மாதம் 7 கிலோ மட்டுமே வழங்கப்படும் என மாற்றப்படவுள்ளது. தமிழ்நாட்டின் சராசரி குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை 3.54 ஆக இருப்பதால், இந்த புதிய விதி அமலுக்கு வந்தால் 5 பேருக்கும் குறைவாக உறுப்பினர்களைக் கொண்ட சுமார் 15.75 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்குக் கிடைக்கும் அரிசியின் அளவு கணிசமாகக் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்திற்கான ஒட்டுமொத்த மாதாந்திர விநியோக அளவு 65,261 மெட்ரிக் டன்னிலிருந்து 42,040 மெட்ரிக் டன்னாகக் குறையும் என முதலமைச்சர் கவலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது 18,64,600 அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ள நிலையில், இதன் மூலம் சமூகத்தின் மிகவும் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த 69 லட்சத்திற்கும் அதிகமான ஏழைப் பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். இத்தகைய சூழலில், மத்திய அரசின் இந்த புதிய திருத்தம் ஏழை எளிய மக்களின் உணவுப் பாதுகாப்பைப் பெருமளவில் பாதிக்கும் என சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய், ஏழைக் குடும்பங்களின் நலனைக் கருத்தில் கொண்டு தற்போதைய நடைமுறையான மாதத்திற்கு 35 கிலோ உணவு தானியங்கள் வழங்கும் முறையையே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.
