திருநெல்வேலி மாவட்டத்தில், விளையாட்டு மற்றும் கலைத் துறைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களைக் கௌரவிக்கும் வகையில் வகுப்பறைகளுக்கு அவர்கள் பெயரையே சூட்டும் ஒரு புதுமையான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவுகள் என்று அழைக்கப்படும் வகுப்பறைகளுக்குப் பதிலாக, இனி சாதனை படைத்த மாணவர்களின் பெயர்கள் சூட்டப்படும். முதற்கட்டமாக மானூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், தேசிய அளவிலான வளையப்பந்து போட்டியில் தங்கம் வென்ற ஜோயல், ஸ்ரீ நிகேத் மற்றும் மாநில அளவில் பதக்கம் வென்ற சுராஜ் கோசன் ஜாய் ஆகியோரது பெயர்கள் அவர்கள் பயிலும் வகுப்பறைகளுக்குச் சூட்டப்பட்டு பெயர்ப்பலகைகள் திறக்கப்பட்டுள்ளன.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் வழிகாட்டுதலில் தொடங்கப்பட்டுள்ள இந்த முயற்சி, அந்தந்தக் கல்வியாண்டு முழுவதும் நடைமுறையில் இருக்கும். ஒரே வகுப்பில் பல மாணவர்கள் சாதனை புரிந்திருந்தால், அருகிலுள்ள மற்ற வகுப்புகளுக்கும் அவர்கள் பெயர்களைச் சூட்டி ஊக்கப்படுத்தப் பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தமிழகத்திலேயே முதன்முறையாக நெல்லையில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்தச் சிறப்பான நடைமுறை, மாணவர்களிடையே போட்டிகளிலும் சாதனைகளிலும் ஈடுபட அதிக ஆர்வத்தைத் தூண்டியுள்ளதுடன், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
