திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள சங்கமேரி நடுத்தெரு பகுதி சேர்ந்தவர் துரை, இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவரது மகன் நல்லமுத்து (17), ராதாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். நேற்று வழக்கம்போல் காலை நல்லமுத்து பள்ளிக்குச் சென்று விட்டு மாலையில் பஸ்ஸில் தங்கநெறி பேருந்து நிலையத்தில் வந்து இறங்கியுள்ளார். பேருந்து நிலையத்திலிருந்து நல்லமுத்து வீட்டிற்கு சிறிது தூரம் நடந்து செல்ல வேண்டும். வீட்டிற்கு நடந்து சென்றிருந்த பாதி வழியிலேயே தலைச்சுற்றல் ஏற்பட்ட மயங்கி விழுந்துள்ளார்.
அக்கம் பக்கத்தில் இருந்தோர் நல்லமுத்துவை தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளனர். பரிசோதித்த மருத்துவர் மாணவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த 2020ஆம் ஆண்டு ஓபன் ஹார்ட் சர்ஜரி நல்லமுத்துவுக்கு செய்ததாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, மாணவன் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மாணவன் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பள்ளி மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மற்றும் பள்ளியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
