சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள எம்.செட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர், பள்ளிக்குச் செல்லாமல் தொடர்ந்து செல்போனைப் பயன்படுத்திக் கொண்டிருந்ததால் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். மேலும், பொதுத்தேர்வில் எப்படி தேர்ச்சி பெறுவாய் என்று கூறி அவரிடமிருந்த தொலைபேசியைப் பறித்து வைத்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அம்மாணவி, வீட்டில் 10 சத்து மாத்திரைகளையும், பள்ளிக்குச் சென்று அங்கு மேலும் 20 சத்து மாத்திரைகளையும் உட்கொண்டுள்ளார்.
மதிய வேளையில் கடும் வயிற்று வலியால் அவதியுற்ற மாணவி, ஆசிரியரிடம் இது குறித்துத் தெரிவித்துள்ளார். உடனடியாகத் தகவல் அறிந்து வந்த பெற்றோர், அவரை மீட்டுத் தாரமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையிலும் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள தொளசம்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
