உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத், விஜயநகர் பகுதியில் உள்ள ‘கௌர் சித்தார்த்தம்’ அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 16 வயது மாணவி, செவ்வாய்க்கிழமை மாலை 15-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளி ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த இம்மாணவி கீழே விழுந்த சத்தம் கேட்டு ஓடிவந்த பாதுகாப்பு ஊழியர்களும் அக்கம் பக்கத்தினரும், அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிசெய்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த சிறுமியின் பெற்றோரும் உறவினர்களும் மகளின் உடலைப் பார்த்து கதறித் துடித்தனர். அப்போது அங்கு திரண்ட சிலர் இச்சம்பவத்தை செல்போனில் வீடியோ எடுக்க முயன்றதால், ஆத்திரமடைந்த பெற்றோருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், தகவலறிந்து வந்த விஜயநகர் காவல்துறையினர் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட சோதனையில், மாணவி எழுதி வைத்திருந்த இரண்டு பக்க தற்கொலை கடிதம் சிக்கியது. அதில், “என் மீது அன்பு காட்டிய அனைவரும் இனி கவலைப்படாமல் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்; எனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன் தங்கையிடம் நன்றாகப் படித்து வாழ்க்கையில் பெரிய ஆளாக வர வேண்டும் என்றும், பெற்றோர் தங்களுக்காகத் தங்கள் எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்ள வேண்டாம் என்றும் உருக்கமாக எழுதியுள்ளார்.
முக்கியமாக, படிப்பின் அதிகப்படியான மனஅழுத்தம் மற்றும் சுமையைத் தாங்க முடியாமலேயே இந்த முடிவை எடுத்ததாக அம்மாணவி அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்த கோத்வாலி உதவி ஆணையர் (ACP) உபாசனா பாண்டே, தற்கொலை கடிதம் கையெழுத்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறினார். இச்சம்பவம் மாணவர்களிடையே அதிகரித்து வரும் கல்வி மனஅழுத்தம் குறித்த தீவிர கவலையை மீண்டும் எழுப்பியுள்ளது.
