திருச்சியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் முன்னிலையிலேயே தவெக எம்.எல்.ஏ. விஜியும், காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. கிறிஸ்டோபரும் மேடையில் வெளிப்படையாக மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமுதாய வளைகாப்பு விழாவிற்கு அமைச்சர் தலைமை தாங்கினார். விழாவின் தொடக்கமாகக் குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வு அமைக்கப்பட்டிருந்த நிலையில், யார் முதலில் விளக்கேற்றுவது என்பது தொடர்பாகத் திருவெறும்பூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. விஜிக்கும், காங்கிரஸ் எம்.பி. கிறிஸ்டோபருக்கும் இடையே திடீரெனக் கடுமையான வாக்குவாதம் வெடித்தது.
இந்த வாக்குவாதத்தின் போது, காங்கிரஸ் எம்.பி. கிறிஸ்டோபர் கையில் மெழுகுவர்த்தியை எடுத்து விளக்கேற்ற முயன்றார். அதற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்த தவெக எம்.எல்.ஏ. விஜி, அரசு விழாக்களில் பின்பற்றப்பட வேண்டிய ‘முறையான நெறிமுறைகள்’ மீறப்படுவதாகக் கூறி அதிருப்தி வெளியிட்டார். மேலும், ஆத்திரத்தில் எம்.பி.யின் கையிலிருந்த மெழுகுவர்த்தியை அவர் தட்டிவிட்டதால், மேடையில் இருந்த அரசு அதிகாரிகளும் தலைவர்களும் அதிர்ச்சியடைந்தனர். மேடையில் நிலவிய அசாதாரணச் சூழலையும் சலசலப்பையும் கண்டு, அமைச்சர் ரமேஷ் உடனடியாக தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்த முயன்றார். மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையே நடந்த இந்த பகிரங்க மோதல் தொடர்பான செய்தி தற்போது அப்பகுதியில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
