குடும்பப் தகராறில் சினிமா துணை நடிகை மீது தாக்குதல்: மருமகன் வீட்டார் மீது காவல் நிலையத்தில் கண்ணீர் புகார் தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகையாகவும், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமானவர் பிரேமபிரியா (45). சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த இவர், தனது சொந்த ஊரான விழுப்புரம் அருகே உள்ள அயினம்பாளையத்தில் சொந்தமாக வீடு கட்டி வசித்து வருகிறார். இவருக்கு பவானி (20) என்ற மகள் உள்ளார். கடந்த ஜூன் 11-ம் தேதி, விழுப்புரம் குழந்தைவேல் நகரைச் சேர்ந்த ஆனந்தராஜா – வனிதா தம்பதியின் மகன் பிரவீன் குமாருக்கும், பவானிக்கும் குடும்பத்தினரால் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது
நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாட்களில், மணமகன் பிரவீன் குமார் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிரேமபிரியா, தன் மகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்தத் திருமணத்தை நிறுத்திவிடலாம் என பவானியிடம் அறிவுறுத்தியுள்ளார். ஆனால் தாயின் பேச்சைக் கேட்காத பவானி, அவருடன் கோபித்துக் கொண்டு பிரவீன் குமார் வீட்டிற்கே சென்றுவிட்டார். தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி பிரவீன் குமாருக்கும் பவானிக்கும் திருமணமும் நடைபெற்றது.
திருமணத்திற்குப் பிறகு பவானி தனது தாய் பிரேமபிரியாவிடம் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு சுமார் 10:30 மணியளவில் தன் மகளைக் காண்பதற்காக பிரேமபிரியா நேரில் சென்றுள்ளார். அப்போது, “என் மகளை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டீர்கள்” எனக் கூறி அவர் நியாயம் கேட்கவே, இரு வீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் வெடித்தது. இதில் ஆத்திரமடைந்த பிரவீன் குமாரின் தந்தை ஆனந்தராஜா, தாய் வனிதா மற்றும் சகோதரன் ஸ்ரீபன்ராஜ் ஆகியோர் சேர்ந்து பிரேமபிரியாவை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இத்தாக்குதலில் காயமடைந்த பிரேமபிரியா, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தொடர்ந்து, தன்னைத் தாக்கிய மருமகன் குடும்பத்தினர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனது மகளிடம் பேசுவதைத் தடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கண்ணீருடன் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் இரு தரப்பினரையும் நேரில் வரவழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
