மத்திய அரசு அறிவித்துள்ள கூடுதல் கலால் வரி விதிப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக, பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. புகையிலை பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதோடு, சிகரெட்டின் நீளத்தைப் பொறுத்து ஒரு சிகரெட்டுக்கு 2.05 ரூபாய் முதல் அதிகபட்சமாக 8.50 ரூபாய் வரை கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றத்தினால் சாதாரண சிகரெட் முதல் பிரீமியம் ரக சிகரெட்டுகள் வரை அனைத்தும் இன்று முதல் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
சிகரெட் மட்டுமின்றி பான் மசாலா மற்றும் வாசனை புகையிலை பொருட்களுக்கும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மெல்லும் புகையிலை மற்றும் குட்கா ஆகியவற்றிற்கு முறையே 82% மற்றும் 91% வரை கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பைத் தடுத்து வருவாயைப் பெருக்குவதற்காக கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய விதிகளின்படி, பான் மசாலா உற்பத்தியாளர்கள் தங்கள் தொழிற்சாலைகளில் சிசிடிவி கேமராக்களை நிறுவி உற்பத்தியைக் கண்காணிக்க வேண்டும் என்பன போன்ற கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்த திடீர் விலை உயர்வு புகைப்பிடிப்பவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
