ஆந்திர மாநிலத்தில் அரசுப் பள்ளியில் சிகரெட் புகைத்ததை தட்டிக்கேட்ட ஆசிரியரை, பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் சக ஆசிரியர்கள் முன்னிலையிலேயே கொடூரமாகத் தாக்கிய சம்பவம் கல்வித்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்.டி.ஆர் (NTR) மாவட்டம் பாபுலபாடு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அரங்கேறிய இந்த வன்முறை, இன்றைய மாணவர்களிடையே ஒழுக்க விழுமியங்கள் எந்த அளவிற்குச் சீரழிந்துள்ளன என்பதைக் காட்டும் கசப்பான உண்மையாக அமைந்துள்ளது.
பள்ளிக் கழிவறையில் மாணவர்கள் மூவர் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்ததை ரவீந்திரர் என்ற ஆசிரியர் தட்டிக்கேட்டுள்ளார். இது குறித்து அவர் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த ஒரு மாணவன், வகுப்பறையிலேயே ஆசிரியருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ரவுடியைப் போலச் சீறிப்பாய்ந்து ஆசிரியரின் நெஞ்சில் ஓங்கி குத்திய அந்த மாணவன், அவர் நிலைகுலைய வைத்ததோடு மட்டுமல்லாமல், தடுக்க வந்த வகுப்பாசிரியையையும் பொருட்படுத்தாமல் மீண்டும் மீண்டும் தாக்க முயன்றுள்ளார்.
இந்தக் கொடூரத் தாக்குதல் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், ஆசிரியர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் மேலெழுந்துள்ளன. “ஆசிரியருக்குப் பயந்து பள்ளிக்குச் சென்ற காலம் மறைந்து, இன்று மாணவர்களுக்குப் பயந்து ஆசிரியர்கள் பணிபுரியும் அவலநிலை ஏற்பட்டுள்ளது” என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். பள்ளிக்கூடத்திலேயே சிகரெட் புகைப்பதும், அதைக் கண்டிக்கும் ஆசிரியரைக் கிரிமினல் போலத் தாக்குவதும் ஒரு நாகரிகச் சமூகத்திற்கு அழகல்ல.
இத்தகைய ‘ரவுடியிசம்’ செய்யும் மாணவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மாணவர்களின் தவறுகளைக் கண்டிப்பது அவர்களின் எதிர்காலத்தை நல்வழிப்படுத்தவே என்பதைப் பெற்றோர்களும் உணர வேண்டும். இந்தச் சம்பவத்தில் ஈடுபடுத்தப்பட்ட மாணவருக்கு உரிய தண்டனை மற்றும் முறையான மனநல ஆலோசனை வழங்கப்படாவிட்டால், பள்ளிக்கூடங்கள் வன்முறைக் கூடங்களாக மாறும் அபாயம் உள்ளது என்பதை இச்சம்பவம் எச்சரிக்கிறது.
