தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுக்கத் தயாரான வி.கே. சசிகலாவுக்கு அவரது சொந்தக் கட்சியினரே அதிர்ச்சி வைத்தியம் அளித்து வருகின்றனர். பாமக நிறுவனர் ராமதாஸுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலை எதிர்கொள்ளும் சசிகலாவின் முடிவுக்கு, அவரது அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, தங்களை முறையாக ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுப்பது மற்றும் டெல்டா, தென் மாவட்டங்களில் குறைவான இடங்களை ஒதுக்கியது போன்ற காரணங்களால் முன்னாள் அமைச்சர் ஆனந்தன், முன்னாள் கொறடா நரசிம்மன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அதிருப்தியின் விளிம்பில் உள்ளனர்.
இந்த உட்கட்சிப் பூசலால் அதிருப்தி அடைந்துள்ள முக்கிய நிர்வாகிகள், விரைவில் தங்களது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணையத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. சசிகலாவின் மிக நெருக்கமான வட்டாரத்தில் இருப்பவர்களே தேர்தல் நேரத்தில் வெளியேறுவது, சசிகலா – ராமதாஸ் கூட்டணிக்கு ஒரு பலத்த பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கை வீழ்த்த நினைத்த சசிகலாவுக்கு, இந்த நிர்வாகிகளின் வெளியேற்றம் அவரது அரசியல் எதிர்காலத்திற்கே ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
மறுபுறம், இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சசிகலா தனது பிரசாரத்தை மிகவும் வீர்யத்துடன் மேற்கொண்டு வருகிறார். நேற்று மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சோழவந்தான் தொகுதி வேட்பாளர் பாலமுருகனை ஆதரித்து அவர் பேசிய உரையில், அரசியல் விமர்சனங்களை விட உணர்ச்சிப்பூர்வமான ஆதங்கங்களே அதிகம் வெளிப்பட்டன. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தான் சந்தித்த துரோகங்கள், சிறைவாசம் முடிந்து வந்தபோது விதிக்கப்பட்ட தடைகள் மற்றும் ஜெயலலிதா நினைவிடம் பூட்டப்பட்டது போன்ற நிகழ்வுகளைப் பட்டியலிட்டு, தொண்டர்களின் ஆதரவை வேண்டிய அவர், மக்கள் நலனுக்காகவே மீண்டும் அரசியலுக்கு வந்துள்ளதாக உருக்கமாகப் பேசினார்.
இருப்பினும், கள யதார்த்தம் சசிகலாவுக்குச் சாதகமாக இல்லை என்பதையே மதுரையில் நடந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. சசிகலா மேடைக்கு வருவதற்கு முன்பே வேட்பாளர் உரையை முடித்ததும், கூட்டம் கலைந்து செல்லத் தொடங்கியது கட்சி நிர்வாகிகளைத் திணறடித்தது. “சின்னம்மா வந்து கொண்டிருக்கிறார்” என நிர்வாகிகள் மன்றாடிக் கேட்டுக் கொண்ட பிறகே மக்கள் மீண்டும் அமர வைக்கப்பட்டனர். ஒருபுறம் முக்கிய நிர்வாகிகளின் வெளியேற்றம், மறுபுறம் பிரசாரக் கூட்டங்களில் தொண்டர்களின் ஆர்வம் குறைவது என 2026 தேர்தல் பயணம் சசிகலாவுக்கு ஒரு அக்னிப் பரீட்சையாகவே அமைந்துள்ளது.
