டெலிபோன் ஆபரேட்டர் to பத்ம ஸ்ரீ விருது வரை.. நடிகர் விவேக் கடந்து வந்த பாதை..

By Begam

Updated on:

நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர் நடிகர் விவேக். தமிழ் திரைப்படத் துறையில் ‘சின்னக் கலைவாணர்’ என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். நடிகர் விவேக் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் 1961ஆம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி பிறந்தார். இவருடைய இயற்பெயர் விவேகானந்தன். விவேக் ஊட்டி கான்வென்ட்டில் பள்ளிப் படிப்பையும், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.காம். பட்டமும் பெற்றவர்.

   

சிறுவயதிலேயே முறைப்படி பரத நாட்டியம் பயின்ற இவர் பல மேடைகளில் பரத நாட்டியம் ஆடி இருக்கிறார். நடிகர் விவேக் மதுரை அஞ்சல் தந்தி அலுவலகத்தில் டெலிபோன் ஆபரேட்டராகவும் பணியாற்றினார். அப்போது  மதுரையில் நடைபெற்ற பரதநாட்டிய போட்டி ஒன்றில் பங்கேற்றார். அதன் பின்பு, இறுதி போட்டி சென்னையில் நடந்தது. அப்போதுதான் பாலசந்தருக்கு அறிமுகமானார் நடிகர் விவேக். இயக்குனர் கே.பாலச்சந்தரின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற படத்தின் மூலம் கால் பதித்தார்.

இதனையடுத்து, புது புது அர்த்தங்கள், மின்னலே பெண்ணின், மனதை தொட்டு, நம்ம வீட்டு கல்யாணம், தூள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.  ‘புதுப்புது அர்த்தங்கள்’ படத்தில் இவர் பேசிய, ‘இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்’ டயலாக் ரசிகர்களின் பேவரைட் டயலாக்குகளில் ஒன்று என்று கூறலாம்.  நடிகர் விவேக் பிலிம்பேர் விருதுகள், தமிழக அரசு விருது, பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட பல விருதுகளை  வாங்கி குவித்தவர்.

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் திரைப்படத்துறை வரலாற்றிலேயே, நகைச்சுவை வாயிலாக சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை சொல்லுவதில் வல்லவர், ‘கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன்’.

அவரைப் பின்பற்றி, தான் நடித்த பெரும்பாலானப் படங்களில் லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு, சமூக சிந்தனைக் கருத்துக்களைப் பெருமளவில் கடைபிடித்து, தமிழ் சினிமாவில் ‘சின்னக் கலைவாணர்’ எனப் போற்றப்பட்டார்.

அப்துல் கலாமை முன்மாதிரியாக எடுத்து கொண்டு செயல்பட்டு வந்த இவர் கோடிக்கணக்கில் மரங்களை நட்டு சமூக நலப்பணிகளை ஆற்றி வந்தார். தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து வரும் விவேக், ‘நாட்டில் வறட்சி ஏற்பட்டதற்கு நாம்தான் காரணம், வறட்சியைப் போக்கும் வகையில் சுமார் ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவேன்’ எனக்கூறி  இத்திட்டத்தினை செயல்படுத்தி மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்தும் வந்தவர்.

நடிகர் விவேக்  இறப்பதற்கு முன்பு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். ஆனால் நடிகர் விவேக்கிற்கு  திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து எக்மோ கருவி பொருத்தப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி  2021ஆம் ஆண்டு  ஏப்ரல் 17ம் தேதி திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இன்றுடன் நடிகர் விவேக் நம்மை விட்டு பிரிந்து 3 வருடங்கள் ஆகிறது. அவர் உடல் இவ்வுலகை விட்டு மறைந்தாலும், நினைவுகளால் நம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.