“டேய் இன்னும் சாகலையா?”…. 48 மணிநேரம் போன் தொடவில்லை என்றால் ஆபத்து…. சீனாவை அதிரவைத்த “Are You Dead?” செயலி….!

By Nanthini on தை 13, 2026

Spread the love

சீனாவில் தனிமையில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “Are You Dead?” (நீங்கள் இறந்துவிட்டீர்களா?) என்ற புதிய மொபைல் செயலி தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. சுமார் 200 மில்லியன் மக்கள் சீனாவில் தனிமையில் வசிப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர்களின் பாதுகாப்பு குறித்த கவலையைப் போக்குவதே இந்த செயலியின் முக்கிய நோக்கமாகும். ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கட்டணச் செயலியாகக் கிடைக்கும் இது, சர்வதேச சந்தையில் ‘Demumu’ என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளது.

இந்த செயலியின் செயல்பாடு மிகவும் எளிமையானது. பயனர் ஒவ்வொரு நாளும் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் செயலிக்குள் சென்று, தான் நலமாக இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு பொத்தானை அழுத்த வேண்டும். ஒருவேளை பயனர் தொடர்ந்து 48 மணிநேரம் எந்தப் பதிலும் அளிக்கவில்லை என்றால், அவர் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்திருக்கலாம் எனக் கருதி, செயலி தானாகவே அவர் ஏற்கனவே பதிவு செய்துள்ள அவசரத் தொடர்பு எண்களுக்கு மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை அனுப்பிவிடும்.

   

தொழில்நுட்ப ரீதியாக இது ஒரு வரப்பிரசாதமாக இருந்தாலும், “நீங்கள் இறந்துவிட்டீர்களா?” என்ற இதன் நேரடியான பெயர் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ‘அடப்பாவி நீ இன்னும் உயிரோட தான் இருக்கியா?’ என்பது போன்ற நகைச்சுவையான தொனியில் இந்தப் பெயர் அமைந்திருப்பதாகப் பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, இந்த செயலியின் பெயரை “Are You Okay?” (நீங்கள் நலமா?) அல்லது “Are You Alive?” என மாற்றவும், முதியவர்களுக்காக கூடுதல் வசதிகளைச் சேர்க்கவும் இதன் உரிமையாளர்கள் தற்போது திட்டமிட்டுள்ளனர்.