அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரானிய துறைமுகங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் அனைத்துக் கப்பல் போக்குவரத்தையும் தடுக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். உலக எரிசக்தி விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியில், அமெரிக்க கடற்படை இந்த முற்றுகையை அமல்படுத்தத் தொடங்கியுள்ளது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, உலகப் பொருளாதாரத்திலும் கவலையை உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவின் இந்த அதிரடி முடிவுக்கு சீனா தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. சீனாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் டாங் ஜுன் (Dong Jun) விடுத்துள்ள எச்சரிக்கையில், “எங்களது கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத் தடையின்றிப் பயணம் செய்து வருகின்றன; ஈரானுடன் சீனா எரிசக்தி மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது, அதனைத் தடுக்கும் வகையில் அமெரிக்கா செயல்படக் கூடாது” என்று நேரடியாக எச்சரித்துள்ளார். மேலும், ஈரான் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும், இந்த வழிப்பாதை தங்களுக்கு எப்போதும் திறந்தே இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் அமைதி காக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள சீன வெளியுறவு அமைச்சகம், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. அதே நேரத்தில், ஈரானுக்குச் சீனா ஏவுகணைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை வெளியிட்ட தகவலைச் சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது. அமெரிக்காவின் இந்த முற்றுகை முயற்சியால் சீனா மற்றும் அமெரிக்கா இடையே நேரடி மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதால், சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
