கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கும்பகோணம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் அப்பகுதியில் குளிர்சாதன பெட்டிகளை பழுது பார்க்கும் தொழில் செய்து வருகின்றார். இவருடைய மனைவி வீட்டில் பள்ளி மாணவர்களுக்கு தனி பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றார். இதனிடையே இவர்களுடைய வீட்டுக்கு தினமும் மாலையில் அந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பாடம் படிப்பதற்காக வந்து சென்றுள்ளனர். அதன்படி வழக்கம்போல அதே பகுதியை சேர்ந்த 11 வயதுடைய சிறுமி ஒருவர் விக்னேஷின் மனைவியிடம் பாடம் படிப்பதற்காக வகுப்புக்கு சென்றுள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த விக்னேஷ் பாடம் படிக்க வந்த அந்த சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். 11 வயது சிறுமி என்றும் பார்க்காமல் அந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக அவர் தொல்லை கொடுத்துள்ளார். படிக்க வந்த இடத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி சிறுமி மன வேதனை அடைந்த நிலையில் உடனே பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் உடனடியாக இதுபற்றி போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
