திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர் என்று அவருடன் பணியாற்றியவர்கள் கூறுவர். இந்நிலையில், அவர் அரசியலுக்கு வந்த பிறகு மாலை 6 மணிக்கு மேல் அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை என்ற விமர்சனம் பரவலாக வைக்கப்பட்டு வருகிறது.
இந்த விமர்சனங்கள் குறித்து இயக்குநர் பேரரசு அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். விஜய் ஒரு படத்திற்கு கால்ஷீட் கொடுக்கும் போது முக்கியமாக மூன்று நிபந்தனைகளை விதிப்பார் என்று அவர் கூறியுள்ளார். அவை ஞாயிற்றுக்கிழமைகளில் படப்பிடிப்பு இருக்கக் கூடாது, மாலை 6 மணிக்கு மேல் படப்பிடிப்பு இருக்கக் கூடாது மற்றும் அவரது பிறந்தநாளில் படப்பிடிப்பு இருக்கக் கூடாது என்பனவாகும்.
விஜய் மாலை 6 மணிக்கு மேல் பணி செய்வதைத் தவிர்ப்பதற்குக் காரணம், அவர் தனது உடல்நலத்தின் மீது கொண்டுள்ள அக்கறை மட்டுமே தவிர வேறொன்றும் இல்லை என்று பேரரசு தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், பிறந்தநாளில் ரசிகர்களைச் சந்திப்பதற்காகவே அவர் விடுப்பு எடுக்கிறார் என்றும், தனது ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’ ஆகிய படங்களில் விஜய் சொன்னபடியே தொடர்ந்து ஐந்து நாட்கள் இரவு நேரப் படப்பிடிப்புகளில் ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
