தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரான விஜய், சமீபத்தில் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றது முதல் அவர் பொதுவெளியிலும் சட்டசபையிலும் தோன்றும் விதம் இணையத்தில் பெரும் விவாதமாக மாறியுள்ளது. குறிப்பாக, அவர் எப்போதும் அணிந்து வரும் கருப்பு நிற கோட்-சூட் மற்றும் அவரது நெற்றியில் உள்ள கருப்பு பொட்டு ஆகியவை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன. இந்த புதிய தோற்றத்தின் பின்னணியில் ஆன்மீகம், ஜோதிடம் மற்றும் ஆளுமை சார்ந்த பல சுவாரசியமான காரணங்கள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அவர் நெற்றியில் வைத்துள்ள கருப்பு நிற பொட்டு ‘அரகஜா திலகம்’ என்று அழைக்கப்படுகிறது. ஜவ்வாது, பச்சை கற்பூரம், புனுகு மற்றும் வெட்டிவேர் போன்ற வாசனைமிக்க மூலிகைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த திலகத்தை ஆன்மீகம் மற்றும் ஜாதக நம்பிக்கைகள் உடைய அரசியல் பிரபலங்களும், தொழிலதிபர்களும் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இந்த அரகஜா திலகத்தை நெற்றியில் இட்டுக் கொள்வதால் வாழ்வில் நேர்மறை மாற்றங்கள், ஈர்ப்பு சக்தி மற்றும் தொடர் வெற்றிகள் கிடைக்கும் என்பது பலரது பலத்த நம்பிக்கையாக உள்ளது.
அதேபோல், விஜய் தொடர்ந்து கருப்பு நிற கோட்-சூட் அணிந்து வருவதும் ஜோதிட ரீதியிலான ஆலோசனைகளின் அடிப்படையில்தான் என்று கூறப்படுகிறது. பொதுவாக, கருப்பு நிறம் என்பது அதிகாரம், கம்பீரமான ஆளுமை, அசைக்க முடியாத தன்னம்பிக்கை மற்றும் தனித்துவத்தைக் குறிக்கும் அடையாளமாகக் கருதப்படுகிறது. பிரபல ஆடை வடிவமைப்பாளரான சபீர் அகமது என்பவரால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கோட்-சூட்டின் விலை சுமார் 40,000 ரூபாய் முதல் 70,000 ரூபாய் வரை இருக்கும் எனத் தெரியவந்துள்ளது.
