கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்து, தமிழக முதலமைச்சர் விஜய் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். சமீபத்தில் நார்வே செஸ் தொடர் உள்ளிட்ட சர்வதேச அரங்கில் அவர் புரிந்த சாதனைகளைப் பாராட்டும் வகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. பிரக்ஞானந்தாவின் சிறப்பான ஆட்டத்தை நினைவுகூர்ந்த முதலமைச்சர், வரும் காலங்களில் அவர் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்தினார்.
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்த பிறகு, பிரக்ஞானந்தா அங்கிருந்த நிருபர்களிடம் பேசினார். அப்போது முதலமைச்சருடனான சந்திப்பு மிகவும் நெகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் அமைந்ததாகக் குறிப்பிட்டார். நார்வே செஸ் தொடரில் உலக சாம்பியன்களை வீழ்த்தியது குறித்து முதலமைச்சர் தன்னிடம் மிகவும் ஆர்வத்துடன் கேட்டறிந்ததாக அவர் பெருமிதத்துடன் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
இந்தச் சந்திப்பின் போது, முதலமைச்சர் விஜய் பிரக்ஞானந்தாவிடம், “‘செஸ்’ போர்டு எடுத்து வந்திருக்கிறீர்களா?” என்று அன்போடு கேட்டுள்ளார். அதற்கு பிரக்ஞானந்தா “ஆமாம்” என்று கூறவே, உடனே முதலமைச்சர் தனது அறையிலேயே ‘செஸ்’ போர்டை விரிக்கச் செய்து, அவருடன் சிறிது நேரம் செஸ் விளையாட்டு குறித்தும், நுணுக்கமான நகர்வுகள் குறித்தும் மிகவும் சுவாரசியமாக உரையாடி மகிழ்ந்தார்.
