தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள், ஆளுங்கட்சியான திமுக மற்றும் முன்னாள் ஆளுங்கட்சியான அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகளுக்கும் படுதோல்வியைப் பரிசளித்து, மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. யாருமே எதிர்பாராத திருப்பமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே இத்தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளார். இந்த எதிர்பாராத படுதோல்வி திமுகவை முற்றிலுமாக நிலைகுலைய வைத்துள்ள நிலையில், கட்சியின் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் முழுமையாகச் சீரமைக்க மு.க.ஸ்டாலின் அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
கட்சியைச் சரிசெய்யும் நோக்கில், பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் தங்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் வெளிப்படையாகப் பகிர்வதற்காக பிரத்யேகமாகத் தொடங்கப்பட்ட ‘உடன்பிறப்பின் குரல்’ (udanpirapinkural.in) இணையதளத்தில் இதுவரை 4.60 லட்சம் கருத்துகள் பெறப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த இணையதளத்தில் வரும் கருத்துகள் அனைத்தும் நேரடியாகத் தனக்கே வந்து சேரும் என்றும்; உடன்பிறப்புகள், கழக நிர்வாகிகள் மட்டுமின்றிப் பொதுமக்களும் வரும் மே 31-ஆம் தேதிக்குள் தங்களது ஆலோசனைகளைப் பதிவு செய்யலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், இந்தத் தகவலை அனைத்துத் தொண்டர்களுக்கும் கொண்டு சேர்க்குமாறு எம்பி, எம்எல்ஏ-க்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இணையதளம் வாயிலாகப் பெறப்படும் இந்தக் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில், திமுக தனது அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கைகளைத் திட்டமிட முடிவு செய்துள்ளது. குறிப்பாக, தேர்தல் தோல்விக்குக் காரணமான பல முக்கிய நிர்வாகிகளைப் பொறுப்புகளில் இருந்து நீக்கவும், நீண்ட காலமாகப் பதவியில் இருக்கும் மூத்த தலைவர்கள் பலருக்கு ஓய்வளிக்கவும் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களுக்குப் பதிலாக, வரும் நாட்களில் கட்சியில் சுறுசுறுப்பாக இயங்கும் இளம் மற்றும் புதிய நிர்வாகிகளுக்கு முக்கிய வாய்ப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
